|

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின்
நாகாபரணமாக, கழுத்துகளை அலங்கரித்ததோடு அவர்களால் பயன்படுத்தப்பட்டும்
பிரபலமான உடனடி நிச்சயச் சாவைத் தரவல்ல விஷக் குப்பி 'சயனைடு' பெயரில்
ஒரு படம், முரளிதர் ஹலப்பா வழங்கும் அக்ஷயா கிரியேஷன்ஸின்
தமிழ்-கன்னடம் இருமொழித் தயாரிப்பில்.
முதலில் வெள்ளோட்டமாகக் கர்நாடகத்தில் வெளியிடப்பட்டு கன்னடப் படம்
கலக்கிக் கொண்டிருக்க-தமிழில் வெளியிடும் முயற்சி
தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டுக்குப்
பலியானதிலிருந்து தொடரும் இப்படத்தில் கொலையாளிகளான ஒற்றைக் கண்
சிவராசனையும் அவருடைய கூட்டாளிகளையும் பிடிக்க, போலீசார் நடத்தும் 20
நாள் வேட்டையே இதன் கதை.
போலீஸ் அதிகாரியாக நாசர், பெண் போராளியாக சினிமா-டிவி நடிகை மாளவிகா
தவிர மற்ற அனைவருமே தமிழுலகம் அறியாதவர்கள் என்பதும் நிஜத்திற்கு வலு
சேர்ப்பதாக இருக்கிறது.
எழுத்து-இயக்கம் புதியவர் A.M.R.ரமேஷ், ஒளிப்பதிவு R.ரத்னவேலு, இசை -
சந்தீப் சௌடா, படத்தொகுப்பு - அந்தோனி, தயாரிப்பு B.கெஞ்சப்பா கௌடா -
S.இந்துமதி.
நடைபெற்ற கொலைக்குப் பிறகு வெளியான பத்திரிகைச் செய்திகள் மற்றும்
பெங்களூரில் விடுதலைப் புலிகள் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர்,
புரோக்கர் ரங்கநாதன், போலீஸ் அதிகாரிகள் போன்ற இச்சம்பவத்தில்
நேரிடையாகச் சம்பந்தப்பட்டவர்களையும் சந்தித்து அதிகபட்சமாகத்
தெரிந்தகொண்ட விஷயங்களையும் தொகுத்து, பாரதத்தையே பதறவைத்த
இச்சம்பவத்தை உயிரோட்டமாகக் கொடுத்திருக்கிறோம் என்கிறார் டைரக்டர்
A.M.R.ரமேஷ்.
தமிழ்நாட்டில் வரி விலக்குப் பெற இப்படத்தின் தலைப்பு ஒரு தடையாக
இருக்காது என்று நம்பலாம். |
|